பள்ளிக்கூடம் படிக்க ஒரு பாடநூல் தேவை

இன்று சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு தகுதிக்கு மீறி பணம் செலவு செய்து தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல. தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் அதிக சம்பளம் பெறும் டாக்டர் அல்லது என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆசையும், தாங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் பயின்ற போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அசௌகரியங்கள் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றும் தான். அதனால் அவர்கள் உருவாக்குவது
1)பணத்தாசை பிடித்த தனியார் கல்வி நிறுவனங்கள்
2) தாய் மொழி மறந்த, ஆங்கில கலாச்சாரம திணிக்கப்பட்ட குழந்தைகள்.

இன்று எல்லா துறைகளிலும் பல முன்னேற்றங்கள் வந்து உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கல்வித்துறை மட்டும் இன்றும் ஆங்கிலேயன் காலத்து குதிரை வண்டி. கல்விக்கும் நடைமுறை வாழ்வுக்கும் உள்ள இடை வெளியால் பயனற்ற கல்வியை கற்றுக்கொண்டு அதற்கு ஒரு சான்றிதழும் பெறுகிறார்கள். தகுதியிருக்கிறதோ இல்லயோ அந்த சான்றிதழ் இருந்தாலே வேலை. திறமையற்றவர்கள் வெட்டி ஆபீசர்களாக அதிக சம்பளம் பெற்றும், திறமை உள்ளவர்கள் கூலித்தொழிலாளிகளாவும் இருக்கும் நிலை.

தொட்டிலில் ஆனாலும் கட்டிலில் ஆனாலும் கட்டையில் போகும் வரையும் கற்றுக்கொள்ளுவதில் ஆர்வமில்லாதவர் எவரும் இல்லை. எல்லோரும் எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கும் பள்ளிக் கல்வி வேப்பங்காயாய் கசப்பது ஏன்?
தாய்ப்பாலை ஆர்வமுடன் உறுஞ்சி குடிக்கும் குழந்தை தாய் சோறூட்டும் போதுமுகத்தைத் திருப்பிகொண்டு அடம் பிடிக்கிறது. திணிக்கப்படுவது யாருக்கும் பிடிக்காது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் கல்வி தடையின்றி கிடைத்தாலே கற்றுக்கொள்வது ஆர்வமாக இருக்கும். உதாரணமாக இணையம் கூகிள்.

இன்று இணையத்தில் எல்லாத் தகவல்களும் அறிவும் பொதுவாக மலிந்து கிடக்கும் தகவல் புரட்சிக் கால கட்டத்தில் கல்விக்கு இவ்வளவு விலை ஏன்? பெற்றோர்களின் கனவுகளை காசாக்கும் கல்விநிறுவனங்கள், தான் சொல்லிக்கொடுப்பது மாணவர்களுக்கு சேருகிறதா என்று கவலைப்படாமல் சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்க்கும் திறைமையற்ற அனேக ஆசிரியர்கள், திறமையான ஆசிரியர்களை கூட பயன்படுத்திக் கொள்ளாமல் யாருக்கோ வேண்டி பள்ளிக்கு வந்தது போல் காலத்தை வீணாக்கி விட்டு பரீட்சை நேரத்தில் சுயநினைவு வந்து மனப்பாடம் செய்தும் பிட் அடித்து பாசாகும் மாணவர்கள். எல்லாமே கால விரயம்.

படி படிஎன்று பிழிந்தெடுப்பதாலும் குறைந்த மார்க் பெற்றால் பிள்ளகளை பிறரோடு ஒப்புமைப்படுத்தி திட்டுவதாலும் படிப்பு வரப்போவதில்லை. அது பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வேரோடு பிடுங்கும் செயலாகும். இதனால் பரீட்சையில் தோற்றால் ஏதோ வாழ்க்கையே இழந்தது போல் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும்.ஒன்றை கற்பதால் என்ன பலன் என்று தெரிந்து விட்டால் கற்கும் ஆர்வம் தன்னால் ஊற்றெடுக்கும்.

ஒரு டாக்டர் அல்லது எஞ்சினீயர்களாகத்தான் பிள்ளைகள் வர வேண்டுமா? இன்னும் எவ்வளவோ அதை விட சிறந்த வேலைகள் உலகில் இருக்கின்றன. படிக்காமல் விளையாடப் போனாலும் திட்டாதீர்கள். விளையாடுவதை கற்றுக்கொள்ளட்டும். விளையாட்டு வீரனாகி கோடி கோடியாக சம்பாதிக்கலாம். வெறும் சினிமா பார்ப்பதை கூட ஒரு கல்வியாக கருதி கற்றுக்கொண்டால் குழந்தைகள் டைரக்டராகும், கதாசிரியராகலாம், ஏன் நடிகனாகலாம். சுற்றியுள்ள எல்லாமே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தான்.எனவே பிள்ளைகள் சுற்றியுள்ள எல்லாவற்றிலிருந்தும் நல்லதை மட்டும எப்படி கற்றுக்கொள்வது என்ற பயிற்சியை அவர்களுக்கு கொடுத்தாலே போதும். உதாரணமாக ஒரு சினிமா எப்படி தயாரிக்கிறார்கள் என்ற அடிப்படை ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்கள் பார்க்கும் சினிமா அவர்களை மயக்காது. கற்றுக்கொடுக்கும். ரசிகர் மன்றங்கள் அமைக்க மாட்டார்கள். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என்று கற்பனை கதாபாத்திரங்களில் மனதை இழக்க மாட்டார்கள்.

சிறு வயதில் நான் நன்றாக பாடுவேன்.வெளியே போட்டிகளில் பல பரிசு வாங்கியிருந்தாலும் என் திறமையை வளர்த்துகொள்ள எனது பள்ளிக்கூடமும் பாடத்திட்டமும் உதவவில்லை. யாராவது படம் வரைய கற்றுத்தர மாட்டார்களா என ஏங்கிய காலத்தில் கஜினி முகம்மது படையெடுத்தை மனப்பாடம் செய்ய சொன்னது கல்வித்துறை. அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டது இருக்கட்டும். நான் எப்படி வீட்டில் ஒரு தென்னை மரம் நடுவது என்று சொல்லித் தந்ததா?. நீச்சல் கற்றுத் தந்த மாமாவை விடவும். சைக்கிளோட்ட கற்றுத்தந்த நண்பனை விடவும் சிறந்த வாத்தியார்கள் எவரும் என் பள்ளியில் இருக்க வில்லை. என்னுள் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து எந்த பாடபுத்தங்களும் கவலைப்படவில்லை. ஆனால் ஈரோடு ராமசாமி தாத்தா கவலைப்பட்டார். என் வாழ்வை வழி நடத்தும் , வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நான் பள்ளிக்கு வெளியே தான் கற்றுக்கொண்டேன். பக்கம் பக்கமாக இரட்டை வரியில் எழுதியும் திருந்தாத என் கையெழுத்து ஒரு நாள் ஒரு ஓவியன் சுவரில் விளம்பரம் எழுதுவதை பார்த்ததும் அழகானது. ஒரேயொரு புத்தகம் எனக்குள் மின்னணுவியலை கற்றுக்கொள்ளும் ஆர்வத்திற்கு திரி கொளுத்திப் போட்டது.

தற்கால கல்வி முறை பெரும்பாலும் மாணவர்களது மூளையை ஒரு கணினியின் ஹார்ட் டிஸ்க் போல பாவித்து அதனுள் முடிந்த அளவு தகவல்களை திணிப்பதற்குத்தான் முயற்சி செய்கிறது. இத்தகைய தகவல்களை பல வருடங்கள் மாய்ந்து மாய்ந்து மண்டையில் ஏற்றிக்கொள்வதால் யாதொரு பயனும் இல்லை. ஒரு கூகிளில் தேடினால் கிடைத்து விட்டு போகிறது.

ஒரு பாடத்திட்டத்தை தயாரிக்கும் குழுவில் குறைந்த பட்சம் மூவர் இருக்க வேண்டும்
1)அந்த பாடத்தைப் பற்றிய விஷயஞானமுள்ள நிபுணர்.
2)அதை யாருக்கு எப்படி சொல்ல வேண்டும் என்று கூறும் மனோதத்துவ நிபுணர்,
3)அதை எப்படி எளிதாக, புரியும்படி வரைபடங்கள் அல்லது மல்டி மீடியா உபயோகித்து விளங்கச் செய்பவர்.

நல்ல ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது ஒரு ஜால வித்தைக்காரனைப்போல மாணவர்களின் கவனத்தை சிதறாமல் ஈர்த்து வைத்திருக்கத் தெரியவேண்டும். பாடங்களை உவமை, ஒப்புமை, செயல் முறை போன்றவை செய்து எளிதாக அதன் கருத்தை பதிய வைப்பார்கள். மாணவனது ஆர்வத்தைத் தூண்டி விட்டால் போதும் கற்பிப்பது எளிது.

சில திறனற்ற ஆசிரியர்கள் உண்டு. வகுப்புக்கு வந்ததும் மாணவர்கள் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டார்கள் திரும்பி நின்று கரும் பலகையில் எதையோ எழுதிவிட்டு கொஞ்சம் கத்திவிட்டு போவார்கள். இன்னொரு டைப் சரியாக சொல்லியே கொடுத்திருக்க மாட்டார்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஒப்பு வித்து விட்டு டெஸ்ட், இம்பொசிசன், ஹோம் வொர்க் என்று மனப்பாட மாணவர்களை உருவாக்குவது. மாணவர்களை தயார் படுத்துமுன் நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதும் தயார் படுத்துவதும் மிகவும் முக்கியம்.

பட்டாம் பூச்சி போல பறக்கத்துடிக்கும் சின்னக்குழந்தைகளை பிரம்பை காட்டி பயமுறுத்தி கட்டிப் போடக்கூடாது. பறக்கக் கற்று கொள்ளட்டும்.அவர்கள் பறக்கட்டும் . புத்தகங்கள் அவர்களுக்குரியது அல்ல. வெட்டி விடப்படாத சிறகுகள் தான் அவர்களுக்குத்தேவை. உங்கள் விருப்பங்களை அவர்களில் திணிக்காதீர்கள். கண்டிப்பு என்ற பெயரில் கட்டிப்போட்டு அவர்களை க்ரோட்டன்ஸ் செடிகளாக்க வேண்டாம். காட்டுச்செடிகளின் தன்னம்பிக்கையுடன் வளரட்டும். அவர்கள் இயற்கையாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் மிகுந்தவர்கள்.
ஆடிப்பாட விடுங்கள் கதை சொல்லிக்கொடுங்கள். கதையினூடே கல்வி சொல்லிக்கொடுங்கள்.
எப்படி பல்லை சுத்தப்படுத்துவது? என்று சொல்லிக்கொடுங்கள்.
தினமும் குளிப்பதன் அவசியம் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சொல்லிக் கொடுங்கள்.
பிறரை, பெரியோரை மதிக்கச் சொல்லிக் கொடுங்கள்.
சத்தான உணவுகள் எவை? அதை எப்படி? ஏன்? உண்ண வேண்டுமென்று சொல்லிக் கொடுங்கள்.
ஒழுக்கமாக உடை உடுப்பதை கற்று வேண்டும். டை அணிவதும், ஷூ அணிவதும் இந்திய கலாச்சாரமில்லை. அதை சிறு குழந்தைகளுக்கு அவசியமும் இல்லை.
இதெல்லாம் பெற்றோர்கள் கடமையும் கூட என்றாலும் எல்லாப் பெற்றோர்களும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எண்கள், எழுத்து, வார்த்தைகள், வாக்கியங்களை முறையாக கற்றுக்கொடுங்கள்.
கூட்டல் கழித்தல், வாய்ப்பாடு போன்ற அடிப்படைக் கணிதத்தை சரியாக பயிற்று வித்து, அவர்கள் பயின்று கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆங்கில மொழி அறிவு அவசியம் தான். அதற்காக தமிழில் பேசுவதையே அவமானமாக கருதி தமிழே தெரியாமல் தங்க்லீஸ் பேசி வளர்க்கப்படும் பிள்ளகள் தான் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு விட துணிபவர்கள். தாய் மொழியில் புலவராகாவிட்டாலும் சரியாக எழுதவும், பேசவும், உச்சரிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

விஞ்ஞானத்தை புத்தத்தை விடுத்து அன்றாடம் காணும் பொருட்களை வைத்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
வரலாறு கற்க ஒரு அனிமேசன் வீடியோ காட்சி போதும். பக்கம் பக்கமாக பழைய சாம்ராஜ்யங்களையும் யுத்தங்களையும் மனதில் பதிய வைத்து கொள்ள அவசியம் என்ன? ரொம்பப் பழைய வரலாறுகள் நூலகங்களில் இருந்து விட்டுப் போகட்டும். ரசாயன மாற்றங்களைப்பற்றி தேவை ஏற்படும் போது தெரிந்து கொள்ளலாம் அந்த இடத்தில்
விழிப்புணர்வு, மனிதநேயம், ஆளுமை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, சமூக ஒன்றுமை, போன்றவற்றை கற்றுக்கொடுங்கள்.
முக்கியமாக வெறும் உழைப்புக்கும் முயற்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லிக்கொடுங்கள். வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?வாய்ப்புகளை எப்படி உபயோகப்படுத்துவது என கற்றுக்கொடுங்கள். மற்றவர்களோடு இணக்கமாக பழகுவது எப்படியென்று சொல்லிக்கொடுங்கள்.

உலகமே மின்சார மயமாகி காலங்கள் ஆகிறது. வீட்டில் ஒரு பல்ப் ஃப்யூஸ் ஆனால் மாற்றத்தெரியாத பட்டதாரிகள். மின்சாரத்தைப் பற்றி மின்பொருட்களை பற்றிய செயல் முறை அறிவை அடிப்படை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

எல்லாத்துறையிலும் புரட்சி உண்டாக்கிய கணினியியலை அடிப்படைக் கல்வியில் சேர்க்க வேண்டும். கணினியின் வரலாறு, அபாக்கஸ் எல்லாம் தேவையில்லை. இன்றைய கணினியை எப்படியெல்லாம் வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்குவது? என்ற அறிவு தான் தேவை.

உடல் நலம் பேணுவது பற்றிய அறிவு, கையில் அடிபட்டால், ஒரு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முதல் உதவி செய்வது பற்றிய அறிவை பயிற்றுவிக்க வேண்டும்.

தனி நபர் பொருளாதார மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுங்கள்.

கவலை, மனழுத்தம், பயஉணர்ச்சி, மூட நம்பிக்கை போன்றவற்றைத் துடைத்தெறியும் மனப்பயிற்சியும் கல்வியும் வழங்குங்கள்.

ஒரு பருவத்தில் எல்லோருக்கும் தோன்றும் காதல் உணர்வு அழிவு சக்தியாக மாறாமல் ஆக்க சக்தியாக்க அதைப்பற்றிய விஞ்ஞான, மனோதத்துவ புரிதலை கற்றுக்கொடுங்கள்.பாலியல் கல்வியை தேவையான பருவத்தில் பக்குவமாக சொல்லிக்கொடுங்கள்.

இன்றைய வாழ்க்கை சூழலுக்கு உடற்பயிற்சி மிக அத்தியாவசியம். உடற்கல்வியை சரியாக சொல்லிகொடுப்பதுடன் அதை வழக்கப்படுத்தவும் வலியுறுத்த வேண்டும்.

தோட்டம் அமைப்பது செடி வளர்ப்பது விவசாயம் போன்றவற்றை சொல்லிக் கொடுக்க்லாம்.

பொது அறிவு வளர்க்கவும், மாணவர்களது வாசிப்பு திறன், எழுதும் திறன், உரையாடல் திறனை வளர்க்கும் விதம் பயிற்சிகள் இருக்க வேண்டும்.

அரசியல் சாக்கடை என்று ஒதுங்கி நிற்காமல் அரசியல் அறிவையும் கற்றுக்கொடுங்கள்.

நவீன தொழில் நுட்பங்களையும், மல்டி மீடியா வசதிகளையும் பயன் படுத்தி சிறந்த பாடங்களை உருவாக்கி, குறுந்தகடுகளாக்கலாம். மாணவர்கள் இதை பள்ளியிலும் வீட்டிலும், இணையம் வழியும் பயன் படுத்தி அறிவுத் தெளிவடையலாம். வீட்டில் பெற்றோர்கள் கூட அறிவு பெறுவார்கள்.

தேர்வு முறைகளில் உள்ள பல குறைகள் களையப்பட வேண்டும். எளிமைப்படுத்தப் பட வேண்டும். ஒரு நினைவுத்திறனை மட்டும் சோதிக்கும்
ஒரு எழுத்து தேர்வில் ஒருமாணவனின் திறமைக்கு மதிப்பெண் போட முடியாது. அப்படியானால் ஒரு சிடிக்கு 100% மதிப்பெண் கொடுக்கலாம்.

மாணவர்களுக்குள் ஒழிந்து கிடக்கும் விஞ்ஞானிகளை, படைப்பாளிகளை, கலைஞனை மற்ற திறமைகளையும் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்குவித்து வெளிக் கொணரவேண்டும். ஆர்வம் அறிந்து கற்றுக்கொடுத்தால் கற்கும் வேகம் கூடும், காலமும் மிச்சம்.

கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். புது இரத்தம் பாயவேண்டும். பொருளாதார சாதி மத வேறுபாடுகள் கடந்து எல்லோருக்கும், எல்லா வயதினருக்கும், எப்போதும் எளிதாக சிறந்த கல்வி கிடைக்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்: வித்தக தந்திரங்கள்

காணொளி:Hackschooling makes me happy | Logan LaPlante | TEDxUniversityofNevada 



கருத்துகள்

அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
சாதிக்

ஒரு அழகான அலசலான கட்டுரை

அருமையான பதிவு... ஆமோதிக்கிறேன்
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறீர்களா வேண்டாம் என்று சொல்லவாறீங்களா?

என்னை பொருத்தவரையில் பள்ளிக்கு செல்வதனால் பாடத்தைவிட டிசிப்பிளின், பழக்கவழக்கம், குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது, முயற்சி இன்னும் என்னவெல்லாமோ குழந்தைகளுக்கு கிடைக்கிறது....
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் இந்த பதிவை காப்பி பண்ணி என்னுடைய இமெயில் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன் உங்கள் அனுமதியோடு

இந்த காலத்திற்கு தேவையான பதிவு இது
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
கல்வி துறை பற்றிய சரியான ஆய்வும் ,விளக்கங்களும் அருமை..நல்ல பதிவு.(தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்)
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அபூ அஃப்ஸர்.பள்ளிப் படிப்பு கண்டிப்பாக தேவை.பள்ளிக்கூடம் தரும் அனுபவங்களும் பாடங்களும் தான் வாழ்வின் அடிக்கல்.அது சிறப்பாக இனிப்பாக காலத்திற்கேற்றவாறு மாற வேண்டும் என்று தான் விரும்புகிறேன். என் கருத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நன்றி ராஜேஸ்வரி.

உங்கள் இருவருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.